பழனி கோவில் நிலம் அபகரிப்பு விவகாரம்: சர்ச்சைக்குரிய விற்பனைப் பத்திரத்தில் என்ன கூறப்பட்டுள்ளது?
பழனி அடிவாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமி மட அறக்கட்டளைக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் தொடர்பான விவகாரம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை பழனி முருகன் கோவில் நிர்வாகம் பராமரித்து வந்ததுடன், கடந்த ஆண்டு பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாகவும் பயன்படுத்தி வந்தது.இந்த நிலையில், கடந்த ஜூன் 6-ஆம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில், அந்த நிலம் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது.புகாரின் அடிப்படையில், பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் முருகதாஸ், திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் பழனி டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகிய நால்வர் மீது முதற்கட்டமாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் கவனம் பெற்றதைத் தொடர்ந்து, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனும், மாவட்ட பதிவாளர் சசிகலாவும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், சர்ச்சைக்குரிய நிலப் பதிவு செல்லாது என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டதுடன், இந்த வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியது.இதையடுத்து திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். போலீஸ் சூப்பிரண்டு சஜிதா, துணை சூப்பிரண்டு அஜய் தங்கம் தலைமையில், ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திண்டுக்கல்லில் முகாமிட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், நிலம் எவ்வாறு விற்பனை செய்யப்பட்டதாக ஆவணப்படுத்தப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.வெளியான விற்பனைப் பத்திரத்தின் விவரங்களின்படி, தண்டபாணி மடம் ஒரு தனியார் அறக்கட்டளை என குறிப்பிடப்பட்டுள்ளது. மடத்திற்குச் சொந்தமான நிலங்கள் மூலம் வருவாய் ஈட்டி தர்மப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும், குறிப்பிட்ட நிலத்திலிருந்து எதிர்பார்த்த வருவாய் கிடைக்காததால் அதை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.மேலும், சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ளதாகக் கூறப்படும் அந்த நிலத்திற்கு ரூ.2 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அதுவே அதிக விலையாகக் கருதப்பட்டதாகவும் பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அந்த விற்பனைப் பத்திரம் கடந்த மார்ச் 27-ஆம் தேதி கையெழுத்திடப்பட்டு, பின்னர் ஜூன் 6-ஆம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டதாகவும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.