பழனி கோவில் நில மோசடி வழக்கு: சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளரிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பூங்கா சாலையில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமி மடம் அறக்கட்டளைக்கு சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பழனி முருகன் கோவில் இணை ஆணையரின் தக்கார் பொறுப்பில் இருந்து வருகிறது. அதன்படி, அந்த நிலத்தை கோவில் நிர்வாகமே பராமரித்து வருகிறது.
சுமார் ரூ.100 கோடி மதிப்புடைய இந்த நிலம், கடந்த ஆண்டு பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது. ஆனால், கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த நிலம் கடந்த 6-ம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில், தனியார் இருவருக்கு ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.இந்த முறைகேடு தொடர்பாக கோவில் நிர்வாகம் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதன் அடிப்படையில், அப்போது பழனி சார்பதிவாளராக பணியாற்றிய ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்றதாக கூறப்படும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் பழனி அருகே உள்ள டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகிய நான்கு பேருக்கு எதிராக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த நில மோசடி வழக்கின் விசாரணை தற்போது சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது ஜாமினில் உள்ளார்.இந்த நிலையில், நில மோசடி வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, ஜஸ்டின் மணிகண்டன் இன்று திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினார். அவரிடம் இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.