நீட் விவகாரம்: "தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்" – இன்ஸ்டாகிராமில் நடிகை ஜோதிகா பதிவு
நீட் தேர்வுக்கு எதிராகவும், சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி, டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.அதேபோல், சென்னை உள்ளிட்ட இடங்களிலும் மாணவர் அமைப்புகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. இளைஞர்கள் முன்னெடுத்து வரும் இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.அந்த வரிசையில், நடிகை ஜோதிகாவும் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.
மாணவர்களுடனும், நாட்டின் எதிர்காலத்துடனும் நான் உறுதியாக நிற்கிறேன். பொறுப்புணர்வுமிக்க ஜனநாயக இந்தியாவுக்கும், கல்வியில் சீர்திருத்தத்திற்கும் ஆதரவளிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.மேலும், "தடைகளைத் தாண்டி வெளிப்படையாக குரல் கொடுத்து வரும் இளம் தலைமுறையினரை நினைத்து பெருமைப்படுகிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் இந்தியா என்பதைக் நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். சோனம் வாங்சுக், அபிஜீத் தீப்கே, சௌரவ் தாஸ் உள்ளிட்டோரின் துணிச்சல் பாராட்டத்தக்கது. தாய்மார்களாகிய நாங்கள் எங்கள் குழந்தைகளை உங்களைப் போல வளர்க்க விரும்புகிறோம். எங்களை அச்சமின்றி பேசக் கற்றுக்கொடுத்ததற்கு நன்றி" என்றும் ஜோதிகா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.