தூத்துக்குடி: தடை செய்யப்பட்ட 240 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; ரூ.13 ஆயிரம் அபராதம்
தூத்துக்குடி மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பல்வேறு கடைகளில் அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் ஆய்வில், 240 கிலோ எடையிலான தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமீறலில் ஈடுபட்ட வணிகர்களிடம் மொத்தம் ரூ.13 ஆயிரம் அபராதமும் வசூலிக்கப்பட்டது.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரின் உத்தரவின்படி கிழக்கு மண்டல சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இணைந்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.இதன் ஒரு பகுதியாக, மட்டக்கடை, டபிள்யூ.ஜி.சி. சாலை உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் அதிகம் செயல்படும் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது விதிகளை மீறி விற்பனைக்காக வைத்திருந்த 240 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிற பொருட்களை பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு மொத்தமாக ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாக வசூலிக்கப்பட்டது.ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிப்பைகள் உள்ளிட்ட மாற்றுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் வலியுறுத்தியுள்ளனர். தடை உத்தரவை மீறுவோருக்கு எதிராக தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.