தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜயின் அலுவலகம் மாற்றப்படுமா? வெளியான தகவல்கள்
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தமிழக தலைமைச்செயலகத்தில், முதல்-அமைச்சர் விஜயின் அலுவலகம் மற்றும் அறையை புதிய இடத்திற்கு மாற்றுவது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.காமராஜர் சாலையில் அமைந்துள்ள தலைமைச்செயலகத்தின் முதல் தளத்தில்தான் தற்போது முதல்-அமைச்சரின் அறை மற்றும் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதே கட்டிடத்தில் அமைச்சர்களின் அலுவலகங்கள், சட்டப்பேரவை கூட்ட அரங்கம், தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு துறை செயலாளர்களின் அலுவலகங்கள், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகம், நூலகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாக பிரிவுகளும் இயங்கி வருகின்றன.முதல்-அமைச்சர் விஜயை சந்திப்பதற்காக அரசியல் தலைவர்கள், தொழில்துறை பிரதிநிதிகள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் தினமும் தலைமைச்செயலகத்திற்கு வருவதால், தற்போதைய அலுவலகத்தில் இடவசதி குறைபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சந்திப்புகளின் போது சிரமங்கள் ஏற்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதையடுத்து, கோட்டை வளாகத்துக்கு அருகில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு முதல்-அமைச்சரின் அலுவலகத்தை மாற்றும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது அந்த மாடியில் உள்ள கருத்தரங்க அரங்கம் மற்றும் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கான உணவகம் போன்ற வசதிகளை வேறு இடத்திற்கு மாற்றி, முழு தளத்தையும் முதல்-அமைச்சரின் அலுவலக பயன்பாட்டிற்காகஒதுக்கதிட்டமிடப்பட்டுள்ளதாகவும்தகவல்கள்வெளியாகியுள்ளன.இதற்கிடையில், இடநெருக்கடியே அலுவலக மாற்றத்திற்கான முக்கிய காரணம் என கூறப்பட்டாலும், தற்போதைய அறை வாஸ்து அடிப்படையில் ஏற்றதல்ல என்றும், உயரமான கட்டிடத்தில் கடலை நோக்கிய அமைப்பில் அலுவலகம் இருக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சரின் ஜோதிடர் ஆலோசனை வழங்கியதாகவும் சில தகவல்கள் பரவி வருகின்றன.எனினும், அலுவலக இடமாற்றம் தொடர்பாக தமிழக அரசின் சார்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.