திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம்... இன்று பவித்ர மாலைகள் சமர்ப்பணம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவம் 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா நேற்று சாஸ்திர சம்பிரதாய முறைப்படி தொடங்கியது. முதல் நாளில் பவித்ர பிரதிஷ்டை நடைபெற்றது.இதையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி உற்சவ மூர்த்திகள் பவித்ர மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலைக்கு எழுந்தருளச் செய்யப்பட்டனர். அங்கு ஹோமம் உள்ளிட்ட பல்வேறு வைதீக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து சம்பங்கி பிரகாரத்தில் பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களைக் கொண்டு உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. வேத பண்டிதர்கள் பஞ்ச சூக்தங்களை பாராயணம் செய்தனர். இதன் பின்னர் பவித்ர பிரதிஷ்டை நடைபெற்றது.மதியம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சிறப்பு சமர்ப்பணம் நடைபெற்றது. மாலையில் உற்சவ மூர்த்திகள் தங்கத் திருச்சி வாகனத்தில் கோவிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இரவு யாகசாலையில் பல்வேறு வைதீக காரிய கர்மங்கள் நடைபெற்றன.இந்த நிகழ்ச்சிகளில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான அதிகாரி முத்தாடா ரவிச்சந்திரா, கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, கோவில் துணை அதிகாரி லோகநாதன், அறங்காவலர் குழு உறுப்பினர் நன்னபனேனி சதாசிவராவ் உள்ளிட்டோர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பவித்ரோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதையொட்டி அதிகாலையில் ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது. அபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளுக்கு பவித்ர மாலைகள் அணிவிக்கப்பட்டன.இந்த நிகழ்வில் திருமலை ஜீயர் சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி முத்தாடா ரவிச்சந்திரா, கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி, துணை நிர்வாக அதிகாரி லோகநாதன், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.