தமிழ்நாட்டில் ஜூலை 22 வரை இயல்பை விட அதிக வெப்பம் நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை காலம் தொடங்கியிருந்தாலும், பல பகுதிகளில் எதிர்பார்த்த அளவிலான மழை பெய்யாததால் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வழக்கமாக ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் இந்த பருவமழைக் காலத்தில் மிதமான மழை, பலத்த காற்று மற்றும் சாரல் நிலவும். இதன் காரணமாக ஜூன், ஜூலை மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் பொதுவாக குறைவாக இருக்கும்.ஆனால் இந்த ஆண்டு தேனி, திண்டுக்கல், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பருவமழையை எதிர்நோக்கியிருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் மழை குறைந்து, வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தமிழகம் முழுவதும் நிலவும் கடும் வெயிலால், பொதுமக்கள் கோடைக்காலத்தைப் போல குடைகளைப் பயன்படுத்தியும், தலையை துணியால் மூடியும் வெளியே சென்று வருகின்றனர்.
வெப்பத்தை சமாளிக்க பலர் இளநீர், நுங்கு, சர்பத் மற்றும் பிற குளிர்பானங்களை அதிகமாக வாங்கி அருந்துகின்றனர். இதன் காரணமாக இளநீரின் விலை ரூ.40-இல் இருந்து ரூ.60 ஆக உயர்ந்துள்ளது.மழைப்பொழிவு இல்லாததால் பல நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்போர் கவலை தெரிவிக்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால் குடிநீர் தட்டுப்பாடு மேலும் தீவிரமடையும் அபாயமும் உருவாகியுள்ளது.இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஜூலை 22-ஆம் தேதி வரை இயல்பை விட அதிக வெப்பம் பதிவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.