தமிழக காவல்துறை அதிகாரிகள் 3 பேருக்கு சிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் அறிவிப்பு
நாட்டின் 80-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். அதேபோல், சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்றுகிறார்.இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றும் அதிகாரிகளின் செயல்திறன், சாதனைகள் மற்றும் நற்பெயர் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று பதக்கங்கள் வழங்கப்படுவது வழக்கமாகும்.அதன்படி, நாடு முழுவதும் ஜனாதிபதியின் தகைசால் பணிக்கான பதக்கத்துக்கு 92 பேர், வீரதீர செயலுக்கான பதக்கத்துக்கு 301 பேர் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் சிறந்த பணிக்கான பதக்கத்துக்கு 604 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஜெ.
விஜய் ஆனந்த் மற்றும் கே. ராமச்சந்திரன் ஆகியோர் சிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆய்வாளர் பத்தருன்னிசா பேகம் மற்றும் உதவி ஆய்வாளர் செந்தில்குமாரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.