கே.ஒய்.சி. சரிபார்ப்பு அவசியம்: காலக்கெடுவுக்குள் நிறைவு செய்யாவிட்டால் மானிய சிலிண்டர் கிடையாது
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்களது விவரங்களை ஆதார் மற்றும் வங்கி கணக்குடன் மின்னணு முறையில் இணைக்கும் கே.ஒய்.சி. சரிபார்ப்பை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டாயமாக முடிக்க வேண்டும் என மத்திய அரசு மற்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இறந்தவர்களின் பெயரில் தொடர்ந்து இருக்கும் எரிவாயு இணைப்புகள், ஒரே முகவரியில் பயன்படுத்தப்படும் கூடுதல் அல்லது போலியான இணைப்புகள் போன்றவற்றைக் கண்டறிந்து நீக்குவதற்காக இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீட்டு பயன்பாட்டுக்காக மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்கள், உணவகங்கள், ஓட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்கப்படுவதைத் தடுப்பதும் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.இதற்காக, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் ஆதார் அடிப்படையிலான மின்னணு கே.ஒய்.சி. சரிபார்ப்பை நிறைவு செய்ய வேண்டும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.வரும் 15-ஆம் தேதிக்குள் இந்த நடைமுறையை நிறைவு செய்யாதவர்களுக்கு எரிவாயு மானியம் வழங்கப்படாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
கே.ஒய்.சி. சரிபார்ப்பை முடிக்காதவர்கள், மானிய விலையில் சிலிண்டர் வாங்கும் தகுதியை இழக்க நேரிடும். இதனால், அவர்கள் வணிகப் பயன்பாட்டுக்கான அதிக கட்டணத்தில் சிலிண்டரை வாங்க வேண்டிய சூழல் உருவாகலாம்.சில மாநிலங்களில், கே.ஒய்.சி. சரிபார்ப்பு மேற்கொள்ளாத வாடிக்கையாளர்களின் புதிய சிலிண்டர் முன்பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என்றும் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.ஏற்கனவே மின்னணு கே.ஒய்.சி. நடைமுறையை முடித்தவர்கள் மீண்டும் அதைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதுவரை இந்தச் சரிபார்ப்பை மேற்கொள்ளாத பொதுவான நுகர்வோர் மற்றும் பிரதான் மந்திரி உஜ்வலா யோஜனா திட்டத்தின் பயனாளிகள் கட்டாயம் இதை நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.வாடிக்கையாளர்கள், தங்களது எரிவாயு நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் இந்தச் செயல்முறையை எளிதாக முடிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.