காங்கிரஸ் அமைச்சர்களின் இடம் ஆட்டம் காணுமோ என்ற சந்தேகம்: நடிகை கஸ்தூரி
கும்பகோணத்தில் கோவில்களில் சாமி தரிசனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கூறியதாவது:சட்டமன்றத்திலும், பொது வெளியிலும் அனைவரும் நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். அரசியல் நோக்கங்களுக்காக பெண்களையும், அவர்களது குடும்பத்தினரையும் அவமதிக்கும் வகையில் பேசுவது தற்போது மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. அரசியல் ஆதாயத்துக்காக ஒருவரை இழிவுபடுத்தும் முயற்சியில், பெண்களின் ஒட்டுமொத்த சுதந்திரத்தையும் கட்டுப்படுத்த நினைப்பது கடும் கண்டனத்துக்குரியது.த.வெ.க. அரசு 100 நாட்களை கடந்துள்ள நிலையில், மக்கள் பொறுமையுடன் காத்திருக்கின்றனர். பாலியல் பிரச்சினைகள் மற்றும் போதை கலாசாரம் தொடர்பான விவகாரங்களில் முந்தைய ஆட்சியை காரணம் காட்டாமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.பரந்தூர் திட்டம் கைவிடப்படும் என முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாகும். தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டம் என்பதற்காக மட்டுமே, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய வளர்ச்சிப் பணிகளை த.வெ.க.
அரசு கைவிடுவது தவறான முடிவாக இருக்கும்.சேலம் விவசாயிகளுக்கு நீதி கிடைத்ததைப் போல, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பரந்தூர் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறித்து முதல்-அமைச்சர் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும். த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி சுமுகமாக இருக்கும் தற்போதைய சூழலை பயன்படுத்தி, மேகதாது அணை விவகாரத்துக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.த.வெ.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் போக்கு உருவாகிவிட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இன்றைய முதல்-அமைச்சர் நாளைய பிரதமர் என்ற த.வெ.க.வினரின் கருத்துக்கும், பேறுகால விடுப்பு அறிவிப்புக்கும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இடைத்தேர்தலில் த.வெ.க. தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றுவிட்டால், காங்கிரஸ் அமைச்சர்களின் பதவிகளுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற சந்தேகம் எழுகிறது.இவ்வாறு நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.