ஆசிரியர் தகுதித்தேர்வு: சட்டசபையில் அரசினர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சட்டசபையில் தனித் தீர்மானத்தை முன்வைத்தார். 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு முன்பு பணியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.தீர்மானத்தின் மீது பேசிய அமைச்சர் ராஜ்மோகன், கட்டாய TET தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவால் 3.28 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆகஸ்ட் 23, 2010-க்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து முழுமையான விலக்கு வழங்க வேண்டும் என்றும், இதற்காக மத்திய அரசு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.அரசின் இந்தத் தனித் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.இதையடுத்து, அரசின் தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.