Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

எப்.சி.ஆர்.ஏ. திருத்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்: பி.வில்சன் வலியுறுத்தல்

எப்.சி.ஆர்.ஏ. திருத்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்: பி.வில்சன் வலியுறுத்தல்
வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்குமுறை (FCRA) திருத்த மசோதாவை மத்திய அரசு முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், FCRA திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு இதுவரை ஏற்கவில்லை என்றாலும், அதை கூட்டு நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.மசோதாவை நாடாளுமன்ற அளவில் விரிவாக ஆய்வு செய்யவும், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்கவும் இதன் மூலம் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தேவாலயங்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள், சட்ட வல்லுநர்கள், சமூக அமைப்புகள் மற்றும் சிறுபான்மை பிரதிநிதிகள் முன்வைத்துள்ள கவலைகளை முழுமையாக பரிசீலிக்கமுடியும்என்றும்தெரிவித்துள்ளார்.முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொண்டு, கல்வி, சுகாதாரம், மனிதநேயப் பணிகள், சமூக சேவை மற்றும் மதப் பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், தொடக்கத்திலிருந்தே மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று தங்கள் அமைப்பு வலியுறுத்தி வந்ததாக பி.வில்சன் கூறியுள்ளார். அதே நேரத்தில், மாற்று நடவடிக்கையாக மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பி, தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியதாக தெரிவித்துள்ளார்.கடந்த சில மாதங்களாக தங்கள் அமைப்பு நடத்திய நடவடிக்கைகள் அமைதியான முறையிலும், ஜனநாயக வழியிலும், அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.கடந்த ஏப்ரல் மாதம், அப்போதைய தமிழக முதல்-அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், FCRA திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெறுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியதை பி.வில்சன் சுட்டிக்காட்டியுள்ளார். ஏப்ரல் 16-ம் தேதி தனது தலைமையில் டெல்லி அரசியலமைப்பு கிளப்பில் தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து கூட்டு நடவடிக்கை மன்றம் நடத்திய தேசிய அளவிலான இணையவழி ஆலோசனையில், நாடு முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருச்சபைத் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.ஜூன் 17-ம் தேதி நடைபெற்ற மற்றொரு தேசிய அளவிலான தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.மேலும், கூட்டு நடவடிக்கை மன்றத்தின் அழைப்பை ஏற்று ஜூன் 28-ம் தேதி நாடு முழுவதும் உள்ள தேவாலயங்கள், கிறிஸ்தவ குடும்பங்கள் மற்றும் மிஷன் அமைப்புகள் சார்பில் தேசிய பிரார்த்தனை மற்றும் உண்ணாநோன்பு கடைப்பிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Advertisement
ஜூலை 3-ம் தேதி JAFM சார்பில் தேசிய எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டதாகவும், இதையொட்டி நாடு முழுவதும் அமைதியான போராட்டங்கள், கையெழுத்து இயக்கங்கள் மற்றும் மனுக்கள் அளிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவும், அவை பிரதமருக்கு அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.ஜூலை 20-ம் தேதி புதுடெல்லியில் உள்ள இந்தியா சர்வதேச மையத்தில் நடைபெற்ற தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருச்சபைத் தலைவர்கள், சுகாதாரத் துறை நிபுணர்கள், கல்வியாளர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றதாகவும் பி.வில்சன் தெரிவித்துள்ளார்.அதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 6-ம் தேதி தனது தலைமையிலான குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதில் பல்வேறு கிறிஸ்தவப் பிரிவுகளைச் சேர்ந்த மதத் தலைவர்கள், அரசு சாரா நிறுவனங்கள், சுகாதார மற்றும் தொண்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்ததாகவும், FCRA திருத்தத்தால் கிறிஸ்தவ சமூகத்தினருக்கும் நிறுவனங்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து உள்துறை அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.இந்த சந்திப்புக்குப் பிறகு, கிறிஸ்தவ சமூகத் தலைவர்களுடன் இணைந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்ததாக பி.வில்சன் கூறியுள்ளார். கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு தொடர்ந்து ஆதரவாக குரல் கொடுத்து வருவதற்காக அவருக்கு நன்றி தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.FCRA திருத்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்பதே கூட்டு நடவடிக்கை மன்றத்தின் பிரதான கோரிக்கை என பி.வில்சன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அதேவேளையில், மசோதா கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்பட்டிருப்பதை ஒரு சாதகமான நடவடிக்கையாக கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக தங்களுடன் துணைநின்ற அனைத்து தலைவர்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கும் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் பி.வில்சன் கூறியுள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு