ஆவணி அவிட்டம்: நாளை மறுநாள் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
ஆவணி அவிட்டம் மற்றும் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாக பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
சுபமுகூர்த்தம் மற்றும் முக்கியமான விசேஷ நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறுவது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு, அந்த நாட்களில் பொதுமக்களின் வசதிக்காக வழக்கத்தைவிட கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஆவணி அவிட்டம் மற்றும் பவுர்ணமி தினமான ஆகஸ்ட் 27-ம் தேதி அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், கூடுதல் டோக்கன்கள் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதையடுத்து, ஒரு சார்பதிவாளர் பணியாற்றும் அலுவலகங்களில் வழக்கமாக வழங்கப்படும் 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 டோக்கன்கள் ஒதுக்கப்படும்.
மேலும், அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களில் வழக்கமான 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும். இதனுடன் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட உள்ளன.