"தமிழ்நாட்டிற்கு என்.எல்.சி தேவையில்லை, நிலத்தை மேலும் கையகப்படுத்த அனுமதிக்க கூடாது" - சவுமியா அன்புமணி
தமிழ்நாட்டில் ஏற்கனவே மின்சார உற்பத்தி தேவையை விட அதிகமாக இருப்பதால், என்.எல்.சி. நிறுவனம் தேவையில்லை என்றும், மேலும் 60 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் பாமக சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய அவர், தமிழ்நாட்டின் தற்போதைய மின்சாரத் தேவை 21 ஆயிரம் மெகாவாட் என்றும், அரசு மற்றும் தனியார் துறைகளில் சேர்த்து 36 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக உள்ளதாக அவர் கூறினார்.இதில் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்களிப்பு 2 ஆயிரம் மெகாவாட் மட்டுமே என்பதால், அந்த நிறுவனம் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என சவுமியா அன்புமணி தெரிவித்தார். மேலும், என்.எல்.சி. தனது சி.எஸ்.ஆர். நிதியை முழுமையாக வடமாநிலங்களுக்கு வழங்குவதாகவும், தமிழகத்தில் அந்த நிதியின் மூலம் தடுப்பணைகள் மற்றும் நெல் குடோன்கள் அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.ஏற்கனவே 40 ஆயிரம் ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் ஒரே இரவில் ‘விஜயமாநகரம்’ என்ற இடத்தில் குடியமர்த்தப்பட்டு, தங்களது உடைமைகளுடன் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்த நிலையில், மேலும் 60 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த என்.எல்.சி. நிர்வாகம் முயற்சி செய்து வருவதாக சவுமியா அன்புமணி குற்றம்சாட்டினார். இதற்கு எதிராக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி தலைமையில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்பட்டதாகவும், அந்தப் போராட்டத்தை கட்டுப்படுத்த வஜ்ரா வாகனம் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.எனவே, கூடுதலாக 60 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த என்.எல்.சி. நிறுவனத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். மேலும், அப்பகுதியில் இளநீரிலும் நச்சுத்தன்மையான டயாசின் இருப்பதாக சவுமியா அன்புமணி தெரிவித்தார்.
திமுக அரசு கூடுதல் தொகையை பெற்றுத்தந்தது: கணேசன்இதைத்தொடர்ந்து பேசிய திமுக எம்.எல்.ஏ. கணேசன், என்.எல்.சி. நிறுவனத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் பணியாற்றுவதாகவும், வெளியில் நடைபெறும் போராட்டங்கள் குறித்த விவரங்கள் அவர்களுக்கு பெரும்பாலும் தெரியாது என்றும் கூறினார்.மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோது தான் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்ததாகக் குறிப்பிட்ட கணேசன், என்.எல்.சி. அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய கூடுதல் தொகையை திமுக அரசு பெற்றுத் தந்ததாக தெரிவித்தார்.மேலும், ஆண்டுதோறும் ரூ.100 கோடி சி.எஸ்.ஆர். நிதியையும் திமுக அரசுதான் பெற்றுத் தந்ததாக அவர் கூறினார். பாதிக்கப்பட்ட மக்களை அரசு கைவிடாது: அமைச்சர் கீர்த்தனாபின்னர் பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, பரந்தூர் மக்களை அரசு பாதுகாத்ததைப் போலவே, என்.எல்.சி. நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் அரசு கைவிடாது என்று தெரிவித்தார்.அதேநேரத்தில், என்.எல்.சி. நிறுவனம் யாருக்குச் சொந்தமானது என்பதை சுட்டிக்காட்டிய அவர், அது மத்திய அரசின் நிறுவனம் என்று கூறினார். தற்போதைய அரசு பொறுப்பேற்று மூன்று மாதங்களே ஆன நிலையில், என்.எல்.சி. தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.மத்திய அரசில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் அங்குள்ள தலைவர்களுடன் பேசி, தமிழ்நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் கூறினார்.என்.எல்.சி. விவகாரத்தில் உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்களை முதலமைச்சர் நிச்சயம் கைவிட மாட்டார் என்றும் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.