அவதூறு வழக்குகளில் எம்.எல்.ஏ.க்களை அவசரமாக கைது செய்யக்கூடாது: ஈ.ஆர். ஈஸ்வரன் வலியுறுத்தல்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசை விமர்சிப்பவர்களை உடனடியாக கைது செய்வது ஜனநாயகத்திற்கு ஏற்ற நடைமுறை அல்ல என்று தெரிவித்துள்ளார்.அரசின் செயல்பாடுகளை விமர்சித்து ஆலோசனைகள் முன்வைப்பவர்கள், சமூக வலைதளங்களில் மாற்றுக் கருத்துகளை பகிர்பவர்கள் மற்றும் அரசியல் மேடைகளில் எதிர்மறை கருத்துகளை வெளிப்படுத்துபவர்கள் மீது உடனடி கைது நடவடிக்கை எடுக்கப்படுவது, ஆட்சியாளர்களின் சகிப்புத்தன்மை குறைவைக் காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, சட்டமன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்படுவது தொடர்ச்சியான நிகழ்வாக மாறியுள்ளதாகவும், அரசியல்வாதிகளுடன் சேர்த்து பத்திரிகையாளர்களும் கைது செய்யப்பட்டு அலைக்கழிக்கப்படுவது சர்வாதிகார போக்காக பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் வழக்குப் பதிவு அல்லது கைது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதையும் மக்கள் கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார்.மேலும், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு மக்கள் நலத் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துவதில் மந்தநிலை காட்டுவதாகவும், அதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் மற்றும் பழனி தொடர்பான மோசடி பத்திரப்பதிவு விவகாரங்களை விமர்சித்தவர்கள், மேலும் தொழில்துறை அமைச்சர் மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தொடர்பான குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டியவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது, எதிர்க்கட்சியினருக்கு அரசை விமர்சிக்க வேண்டாம் என்ற எச்சரிக்கையாக உள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.தனிநபர்கள் குறித்து அவதூறான கருத்துகள் கூறப்பட்டால், சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தின் முடிவை எதிர்பார்க்கலாம் என்றும், ஆனால் காவல்துறை அவசரமாக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை கைது செய்வது எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் செயலாகவே பார்க்கப்படும் என்றும் ஈ.ஆர்.
ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.மேலும், முன்னாள் முதல்-அமைச்சர் குறித்து கடந்த காலங்களில் பல்வேறு தனிப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்ததையும் தற்போதைய அரசு நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.