அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையில் மரங்களை அகற்றும் பணி தீவிரம்...
திருவள்ளூர் மாவட்டத்தில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில், மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பெரிய மரக்கிளைகள் மற்றும் அடர்ந்த தாவரங்கள் அகற்றப்பட்டு, மீட்பு மற்றும் ஆய்வுப் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அமோனியா வாயுவை முழுமையாக பாதுகாப்பான முறையில் வெளியேற்றும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
பணிகள் நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் நுழைவுக்கும் தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுற்றுப்புற சூழலை தொடர்ந்து கண்காணித்து, எந்தவித ஆபத்தும் ஏற்படாத வகையில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அமோனியா வாயு அகற்றும் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு, தொழிற்சாலையில் விரிவான பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவு எடுக்க உள்ளது.