அசாமில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 97 ஆக உயர்வு
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் பல மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோல்பாரா, காக்சார், லக்கிம்பூர், திப்ரூகர், ஜோர்ஹட், பிஸ்வநாத், சராய்தியோ, நல்பாரி, பக்சா, சிவசாகர், தர்ரங், சோனித்பூர், தின்சுகியா, உதல்குரி, கோலாகாட், கர்பி அங்லோங் உள்ளிட்ட மொத்தம் 25 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், 480-க்கும் அதிகமான கிராமங்கள் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளன.வெள்ளம் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சுமார் இரண்டு வாரங்களாக ரெயில் சேவை முடங்கியுள்ளதுடன், மின்விநியோகமும் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட மக்கள், மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 133 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பல இடங்களில் தற்போது வெள்ளநீர் மெதுவாக வடிந்து வருவதால் பாதிப்புகள் ஓரளவு குறைந்து வருகின்றன.
இருப்பினும், வெள்ளம் தொடர்பான விபத்துகளில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இன்றைய நிலவரப்படி, கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.இதற்கிடையில், வெள்ளநீரில் மூழ்கியதால் சுமார் 14,382.26 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. மாநிலம் முழுவதும் சுமார் 1.68 லட்சம் மக்கள் இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அரசு தொடர்ந்து தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.