51-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் 51-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி வளாகத்தில் இன்று தொடங்கியது. போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் இணைந்து தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இலக்கை நோக்கி சுட்டு போட்டியை இருவரும் ஆரம்பித்து வைத்தனர். பின்னர், துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், விளையாட்டின் அடிப்படை பயிற்சிமுறைகள்மற்றும்போட்டிநடைமுறைகள்குறித்துபயிற்சியாளர்களிடம்கேட்டறிந்தனர்.துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்குத் தேவையான உள்கட்டமைப்புகள் குறித்து தகவல்களை அறிந்ததாகவும், இந்த விளையாட்டை தாமும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.இந்த சாம்பியன்ஷிப் போட்டிகள் 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் ரேஞ்ச்களில் நடைபெறுகின்றன.
இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள், 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் ஸ்போர்ட் பிஸ்டல், 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் (மண்டியிட்டு, படுத்து, நின்று சுடுதல்) மற்றும் ஷாட்கன் உள்ளிட்ட பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு பிரிவுகளில் நடைபெறும் இந்தப் போட்டிகள், சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனம் (ISSF) வகுத்துள்ள விதிமுறைகளின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன. போட்டியாளர்கள் அனைவரும் பாதுகாப்பு உபகரணங்களுடன், கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி பங்கேற்கின்றனர்.இந்த போட்டியில் காவல்துறை வீரர்கள், தேசிய மாணவர் படை (NCC) உறுப்பினர்கள் மற்றும் துப்பாக்கி சுடுதல் வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.