“5 ஆண்டுகளாக காத்திருந்தேன்” - பிரான்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக ஜினேடின் ஜிடேன்
பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் நட்சத்திர வீரர் ஜினேடின் ஜிடேன் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 14 ஆண்டுகளாக பிரான்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த டிடியர் டெசாம்ஸ் (57), சமீபத்தில் நிறைவடைந்த உலகக் கோப்பை கால்பந்து தொடருடன் தனது பதவியில் இருந்து விலகினார். பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட பிரான்ஸ், அரைஇறுதியில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்து இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்திலும் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த பிரான்ஸ் அணி 4-வது இடத்தை பிடித்தது. டெசாம்ஸ் தலைமையில் பிரான்ஸ் அணி 2018-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றதுடன், 2022-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 2-வது இடத்தையும் பிடித்தது.டெசாம்ஸ் விலகிய நிலையில், பிரான்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அந்த நாட்டைச் சேர்ந்த ஜினேடின் ஜிடேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான அவர், 1998-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் முக்கிய வீரராக விளங்கினார். சர்வதேச அளவில் 108 போட்டிகளில் விளையாடியுள்ள ஜிடேன், 31 கோல்களை பதிவு செய்துள்ளார்.54 வயதான ஜிடேனுடன் 4 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரான்ஸ் கால்பந்து சம்மேளன தலைவர் பிலிப் டியாலோ பாரீசில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
பிரான்ஸ் கால்பந்து சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் முன்னிலையில் ஜிடேன் தனது புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.பிரான்ஸ் அணி அடுத்ததாக செப்டம்பர் 25-ம் தேதி நடைபெறும் நேஷன்ஸ் லீக் போட்டியில் துருக்கி அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. இந்த போட்டியின் மூலம் ஜிடேன் தனது பயிற்சியாளர் பயணத்தை தொடங்குகிறார்.புதிய பொறுப்பை ஏற்ற பிறகு பேசிய ஜிடேன், “நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். எங்களிடம் திறமையான வீரர்களும், சிறந்த அணியும் உள்ளது. இந்த வாய்ப்புக்காக 5 ஆண்டுகளாக காத்திருந்தேன். அதனால் தற்போது உணர்ச்சிவசப்படுகிறேன்.பயிற்சியாளராக எனது வாழ்க்கையில் இது மிகவும் மகிழ்ச்சியான நாள். ஒரு ரசிகராகவும், எதிர்கால பயிற்சியாளராகவும் இந்த அணியை தொடர்ந்து கவனித்து வந்தேன். ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய பிறகு, பிரான்ஸ் அணியை வழிநடத்த வேண்டும் என்பதே எனது ஒரே விருப்பமாக இருந்தது.அதனால்தான் பல கிளப் அணிகள் பயிற்சியாளர் பொறுப்புக்கு அணுகியபோதும் நான் ஏற்கவில்லை. நான் விளையாடிய அணியின் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த புதிய சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.