வைகை நதியை மீட்டெடுக்கும் பணிக்காக வைகை M. ராஜனுக்கு "வைகை கொண்டான்" விருது வழங்கி கௌரவிப்பு
வ.உ.சிதம்பரனார் சமூக நலப் பேரவை சார்பில், வைகை நதியின் இயற்கை வளத்தையும் பாரம்பரியத்தையும் மீட்டெடுக்கும் பணியில் பல ஆண்டுகளாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயல்பட்டு வரும் வைகை M. ராஜன், வைகை நதி மக்கள் இயக்கம் அமைப்பின் முன்னோடியான அவர்களுக்கு, "வைகை கொண்டான்" என்ற உயரிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இலக்கியங்கள் போற்றிப் பெருமை பேசும் வைகை நதியின் வரலாற்றுப் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், வைகை நதியை பாதுகாப்பது, தூய்மைப்படுத்துவது, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஆற்றங்கரைகளை பசுமையாக்குவது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் வைகை M. ராஜனின் அர்ப்பணிப்பு மற்றும் சமூகப் பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.
விருதினை, வைகை நதி மக்கள் இயக்கத்தின் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திரு. பார்த்தசாரதி மற்றும் திரு. வீரராகவன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மதுரை ஆதீனம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வைகை நதியைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும், இயற்கை வளங்களை காக்கும் பணியில் சமூக அமைப்புகளின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், வ.உ.சிதம்பரனாரின் பேரன் வா.சிதம்பரம் அவர்கள் கலந்து கொண்டு, சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் தன்னார்வலர்களை ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற கௌரவங்கள் வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது என பாராட்டினார்.
நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு, வைகை நதியை மீட்டெடுக்கும் பணியில் தொடர்ந்து செயல்பட்டு வரும் வைகை M.
ராஜனுக்கும், வைகை நதி மக்கள் இயக்கத்திற்கும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வு வைகை நதியைப் பாதுகாக்கும் சமூகப் பொறுப்பை மேலும் வலியுறுத்தியதுடன், இயற்கை வளங்களை காக்க ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்ற விழிப்புணர்வையும் பொதுமக்களிடையே ஏற்படுத்தியது.