வெறும் அரசியல் காரணங்களுக்காக ரூ.27,500 கோடி திட்டத்தை கைவிடுவதா? - கிருஷ்ணசாமி கேள்வி
பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்த தமிழக அரசின் முடிவு நியாயமானதாகத் தெரியவில்லை என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறியுள்ளதாவது:சென்னை விமான நிலையத்திற்கு மாற்றாக, ஸ்ரீபெரும்புதூர் அருகே பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.27,500 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது. விமான நிலையம் அமைப்பதற்குத் தேவையான நிலத்தை மாநில அரசே கையகப்படுத்த வேண்டும் என்பதால், பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் 5,846 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதில் இதுவரை 1,802 ஏக்கர் நிலம் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.எனினும், பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது விளைநிலங்களை வழங்க முடியாது என்று கூறி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.தொழிற்பேட்டைகள், சிட்கோ, சிப்காட் மற்றும் பெரிய விமான நிலையங்கள் போன்ற திட்டங்களுக்கு பொதுவாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தேவைப்படும். அவற்றுக்கான இடங்களைத் தேர்வு செய்யும்போது, பெருநகரங்களுடனான இணைப்பு, எதிர்கால வளர்ச்சி, துறைமுகங்கள் மற்றும் பிற போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற நிலத் தேர்வுகளின்போது நிலத்தின் மதிப்பு மற்றும் மக்கள் தங்கள் நிலத்தின் மீது கொண்டுள்ள பற்று காரணமாக நிலக் கையகப்படுத்தலுக்கு எதிர்ப்பு எழுவது நாடு முழுவதும் காணப்படும் பிரச்சினையாகும்.முன்பு வசதி படைத்தவர்களுக்கான போக்குவரத்தாக மட்டுமே கருதப்பட்ட விமானப் பயணம், தற்போது அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் முக்கிய போக்குவரத்து வசதியாக மாறியுள்ளது. எதிர்காலத்தில் பெரும்பாலான மக்கள் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் நிலை உருவாகலாம். எனவே விமான நிலைய விரிவாக்கங்களை குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கான வசதியாக மட்டும் பார்க்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.பசுமை விமான நிலையங்கள் நவீன வசதிகளுடன் உருவாக்கப்படுவதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்களுக்கான முக்கிய மையங்களாகவும் செயல்படும். மேலும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மின் உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும் பெரிய விமான நிலையங்கள் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.இத்தகைய நோக்கங்களுடன் உருவாக்கத் திட்டமிடப்பட்ட பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.