‘விழித்திரை காப்போம்’... பார்வையை பாதுகாக்க தமிழக அரசின் புதிய திட்டம்!
தமிழ்நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளவர்களுக்கு ஆண்டுதோறும் விழித்திரை பரிசோதனை மேற்கொண்டு, பார்வையை பாதிக்கக்கூடிய நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் ‘விழித்திரை காப்போம்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள மண்டல அரசு கண் மருத்துவமனையில் இன்று (18.09.2026) நடைபெற்ற திட்டத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சியை மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அந்த மருத்துவமனையில் விழித்திரை அறுவை சிகிச்சை மேற்கொண்ட பயனாளிகளிடம் சிகிச்சை குறித்து அவர் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, எழும்பூர் மண்டல கண் மருத்துவமனையில் நாட்டிலேயே முன்னோடி திட்டமாக ‘விழித்திரை காப்போம்’ திட்டத்திற்கான முன்வெளியீட்டு நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளைக் கொண்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை விழித்திரை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். இதன்மூலம் விழித்திரை மற்றும் பார்வையை பாதிக்கக்கூடிய நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, தேவையான உயர் சிறப்பு சிகிச்சையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 385 வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 37 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 150 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கான தலைமையகமாக மண்டல அரசு கண் மருத்துவமனை செயல்படும். தொழில்நுட்ப உதவி, மருத்துவப் பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குவதிலும் இந்த மருத்துவமனை முக்கியப் பங்கு வகிக்கும். இதன் மூலம் பொதுமக்களை பார்வையை பாதிக்கக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார். 6,000-க்கும் மேற்பட்ட கூடுதல் மருத்துவ இடங்கள் மருத்துவத் துறையில் புதிய அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் 4 அரசாணைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். முதலமைச்சர் பட்ஜெட் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகளின்படி, 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்குவதுடன், ஏற்கனவே செயல்பட்டு வரும் செவிலியர் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்பட உள்ளன. மேலும், 12 துணை மருத்துவப் படிப்புகளில் 2,788 இடங்களும், மருந்தியல் படிப்புகளில் 735 கூடுதல் இடங்களும் என மொத்தம் 6,000-க்கும் மேற்பட்ட கூடுதல் மாணவர் இடங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதனை விரைந்து செயல்படுத்தும் வகையில் மருத்துவத் துறை நடவடிக்கை மேற்கொண்டு அரசாணைகளை வெளியிட்டுள்ளது. அரசாணை எண் 261-ன் படி, திருநெல்வேலி, திருச்சி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.270.26 கோடி செலவில் புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. அரசாணை எண் 262-ன் அடிப்படையில், கோயம்புத்தூர் ESI மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 60 மாணவர் இடங்களுடன் செவிலியர் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே உள்ள அரசு செவிலியர் கல்லூரிகளில் டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு 1,290 கூடுதல் இடங்கள், B.Sc. நர்சிங் படிப்புக்கு 440 இடங்கள், M.Sc. நர்சிங் படிப்புக்கு 75 இடங்கள் மற்றும் Post Basic B.Sc. நர்சிங் படிப்புக்கு 120 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.