தமிழ்நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளவர்களுக்கு ஆண்டுதோறும் விழித்திரை பரிசோதனை மேற்கொண்டு, பார்வையை பாதிக்கக்கூடிய நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் ‘விழித்திரை காப்போம்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள மண்டல அரசு கண் மருத்துவமனையில் இன்று (18.09.2026) நடைபெற்ற திட்டத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சியை மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அந்த மருத்துவமனையில் விழித்திரை அறுவை சிகிச்சை மேற்கொண்ட பயனாளிகளிடம் சிகிச்சை குறித்து அவர் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, எழும்பூர் மண்டல கண் மருத்துவமனையில் நாட்டிலேயே முன்னோடி திட்டமாக ‘விழித்திரை காப்போம்’ திட்டத்திற்கான முன்வெளியீட்டு நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளைக் கொண்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை விழித்திரை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். இதன்மூலம் விழித்திரை மற்றும் பார்வையை பாதிக்கக்கூடிய நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, தேவையான உயர் சிறப்பு சிகிச்சையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 385 வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 37 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 150 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கான தலைமையகமாக மண்டல அரசு கண் மருத்துவமனை செயல்படும். தொழில்நுட்ப உதவி, மருத்துவப் பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குவதிலும் இந்த மருத்துவமனை முக்கியப் பங்கு வகிக்கும். இதன் மூலம் பொதுமக்களை பார்வையை பாதிக்கக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார். 6,000-க்கும் மேற்பட்ட கூடுதல் மருத்துவ இடங்கள் மருத்துவத் துறையில் புதிய அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் 4 அரசாணைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். முதலமைச்சர் பட்ஜெட் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகளின்படி, 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்குவதுடன், ஏற்கனவே செயல்பட்டு வரும் செவிலியர் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்பட உள்ளன. மேலும், 12 துணை மருத்துவப் படிப்புகளில் 2,788 இடங்களும், மருந்தியல் படிப்புகளில் 735 கூடுதல் இடங்களும் என மொத்தம் 6,000-க்கும் மேற்பட்ட கூடுதல் மாணவர் இடங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதனை விரைந்து செயல்படுத்தும் வகையில் மருத்துவத் துறை நடவடிக்கை மேற்கொண்டு அரசாணைகளை வெளியிட்டுள்ளது. அரசாணை எண் 261-ன் படி, திருநெல்வேலி, திருச்சி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.270.26 கோடி செலவில் புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. அரசாணை எண் 262-ன் அடிப்படையில், கோயம்புத்தூர் ESI மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 60 மாணவர் இடங்களுடன் செவிலியர் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே உள்ள அரசு செவிலியர் கல்லூரிகளில் டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு 1,290 கூடுதல் இடங்கள், B.Sc. நர்சிங் படிப்புக்கு 440 இடங்கள், M.Sc. நர்சிங் படிப்புக்கு 75 இடங்கள் மற்றும் Post Basic B.Sc. நர்சிங் படிப்புக்கு 120 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசாணை எண் 263-ன் கீழ் B.Pharm படிப்புக்கு 600 கூடுதல் மாணவர் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல், அரசாணை எண் 264-ன் படி Bachelor of Optometry, Bachelor of Emergency Medical Technologist, Bachelor of Medical Laboratory Science, Bachelor of Dialysis Therapy Technology, Bachelor of Anaesthesia and Operation Theatre Technology, Bachelor of Medical Radiology and Imaging Technology, Bachelor of Radiation Therapy Technology, Bachelor of Respiratory Technology, Bachelor of Occupational Therapy, Bachelor of Physiotherapy, Bachelor of Physician Associates, Bachelor of Nutrition and Dietetics (Honours) ஆகிய 12 துணை மருத்துவப் படிப்புகளில் 1,646 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. டெங்கு பாதிப்பு குறித்து அமைச்சர் விளக்கம் டெங்கு பாதிப்பு குறித்தும் அமைச்சர் விளக்கம் அளித்தார். கடந்த சில நாட்களின் நிலவரப்படி, செப்டம்பர் 14-ம் தேதி 61 பேருக்கும், 15-ம் தேதி 133 பேருக்கும், 16-ம் தேதி 283 பேருக்கும் டெங்கு பாதிப்பு பதிவான நிலையில், 17-ம் தேதி இந்த எண்ணிக்கை 244-ஆக குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இது பருவகால மாற்றத்தின் ஒரு பகுதியாகும் என்றும், தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறைகள் சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் எனக் குறிப்பிட்ட அமைச்சர், மழைநீர் தேங்கும் வகையில் செயல்படும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறினார். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தினசரி காய்ச்சல் பாதிப்பு தொடர்பான விவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். உள்ளாட்சி அமைப்புகளில் கொசு ஒழிப்பு பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை இருந்தால், தேவையான பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார். டெங்கு போன்ற சூழ்நிலைகளில் உடனடி பணியாளர் தேவை ஏற்படுவதால், மாவட்ட நலச்சங்கங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே முதற்கட்டமாக 2,500 செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக அவர்களின் பணிகள் நிரந்தரம் செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். சர்க்கரை நோயாளிகளுக்கு விழித்திரை பரிசோதனையான Fundus Screening-ஐ கட்டாயமாக்குவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளைப் பெற்ற பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் வ. லோகநாயகி, மண்டல அரசு கண் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் விநாயகமூர்த்தி, மாநில கண் பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட இயக்குநர் டாக்டர் சந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் சாந்தாராம், ஸ்டான்லி அரசு பொது மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் அரவிந்தன், ஓமந்தூரார் அரசு பொது மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஹரிகரன், கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் கவிதா உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.