ரூ.634 கோடி ஊழலில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை – நடிகை ஜனனி அசோக்குமார் விளக்கம்
ரூ.634 கோடி ஊழல் விவகாரத்தில் தனது பெயர் தொடர்புபடுத்தப்படுவது முற்றிலும் தவறான தகவல் என்றும், அந்த விவகாரத்திற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் சின்னத்திரை நடிகை ஜனனி அசோக்குமார் விளக்கமளித்துள்ளார். கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் நியமனங்களுக்காக ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த விவகாரத்தில் சின்னத்திரை நடிகை ஜனனி அசோக்குமாரின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதையடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், ரூ.634 கோடி ஊழல் வழக்குடன் தன்னைத் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகளைப் பார்த்ததாகவும், அதற்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம் என்பதால் இந்த அறிக்கையை வெளியிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனக்கும் இந்த ஊழல் விவகாரத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்பதை உறுதியாகத் தெரிவித்துள்ள அவர், தான் எப்போதும் அரசியலில் இருந்து விலகியே இருப்பதாகவும், எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இல்லை என்றும், அரசியல்வாதிகள் யாருடனும் தனக்குத் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஆதாரமின்றி சமூக வலைதளங்களில் பரப்புவது வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஜனனி, சம்பந்தப்பட்டவர்களிடம் உரிய விளக்கம் பெறாமலும், உண்மைகளைச் சரிபார்க்காமலும் ஒருவரது பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.