இந்திய விமானப்படையின் 29-வது தலைமை தளபதியாக ஏர் சீப் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் இன்று அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதுவரை விமானப்படை தலைமை தளபதியாகப் பணியாற்றி வந்த ஏர் சீப் மார்ஷல் அமர் பிரீத் சிங், இன்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, இந்தியாவின் வான்வெளி பாதுகாப்புப் பொறுப்பு அசுதோஷ் தீட்சித்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 1986-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் போர் விமானியாகப் பணியில் சேர்ந்தவர் அசுதோஷ் தீட்சித். மிராஜ்-2000, மிக் ரக விமானங்கள், ஜாகுவார் மற்றும் உள்நாட்டுத் தயாரிப்பான தேஜஸ் உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்களை இயக்கிய அனுபவம் அவருக்கு உள்ளது. இதுவரை 3,500 மணி நேரத்திற்கும் மேலாக விமானங்களை இயக்கியுள்ளார்.
Advertisement
1999-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின்போது, இந்திய ராணுவத்தின் முக்கிய நடவடிக்கைகளான 'ஆபரேஷன் சபேத் சாகர்' மற்றும் 'ஆபரேஷன் ரக்ஷக்' ஆகியவற்றில் பங்கேற்று சிறப்பான பங்களிப்பை வழங்கினார். விமானப்படையில் சுமார் 40 ஆண்டுகளாக ஆற்றிய சேவையைப் பாராட்டி, மத்திய அரசு அவருக்கு 'பரம் விசிஷ்ட் சேவா' பதக்கம் உள்ளிட்ட பல்வேறு உயரிய ராணுவ விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. இந்நிலையில், இந்திய விமானப்படையின் உயரிய பொறுப்பை ஏற்றுள்ள அசுதோஷ் தீட்சித்துக்கு ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.