ரூ.634 கோடி ஊழலில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை – நடிகை ஜனனி அசோக்குமார் விளக்கம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
31 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 31 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ரூ.634 கோடி ஊழலில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை – நடிகை ஜனனி அசோக்குமார் விளக்கம்

ரூ.634 கோடி ஊழலில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை – நடிகை ஜனனி அசோக்குமார் விளக்கம்

ரூ.634 கோடி ஊழல் விவகாரத்தில் தனது பெயர் தொடர்புபடுத்தப்படுவது முற்றிலும் தவறான தகவல் என்றும், அந்த விவகாரத்திற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் சின்னத்திரை நடிகை ஜனனி அசோக்குமார் விளக்கமளித்துள்ளார். கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் நியமனங்களுக்காக ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த விவகாரத்தில் சின்னத்திரை நடிகை ஜனனி அசோக்குமாரின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதையடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், ரூ.634 கோடி ஊழல் வழக்குடன் தன்னைத் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகளைப் பார்த்ததாகவும், அதற்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம் என்பதால் இந்த அறிக்கையை வெளியிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனக்கும் இந்த ஊழல் விவகாரத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்பதை உறுதியாகத் தெரிவித்துள்ள அவர், தான் எப்போதும் அரசியலில் இருந்து விலகியே இருப்பதாகவும், எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இல்லை என்றும், அரசியல்வாதிகள் யாருடனும் தனக்குத் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஆதாரமின்றி சமூக வலைதளங்களில் பரப்புவது வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஜனனி, சம்பந்தப்பட்டவர்களிடம் உரிய விளக்கம் பெறாமலும், உண்மைகளைச் சரிபார்க்காமலும் ஒருவரது பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். செய்திகளை வெளியிடும்போது உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டியது ஊடகங்களின் முக்கியப் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், விசாரணைக்கு அழைக்கப்படுவதால் மட்டுமே ஒருவர் குற்றம் செய்தவர் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். திரைத்துறையில் கடுமையாக உழைத்து தனக்கென ஒரு மரியாதையான அடையாளத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ள அவர், ஒரு பெண் தனது வாழ்க்கையையும் தொழிலையும் சுயமாகப் போராடி வளர்த்தெடுக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் பரவும் ஆதாரமற்ற அவதூறுகள் அந்த உழைப்பை மறைத்துவிடுவதாக வேதனை தெரிவித்துள்ளார். ஒருவரைப் பற்றிய முழுமையான உண்மைகளை அறியாமல், இணையத்தில் பரவும் தகவல்களின் அடிப்படையில் அவர்களைப் பற்றி தவறான முடிவுகளுக்கு வந்துவிடக் கூடாது என்றும் ஜனனி கேட்டுக்கொண்டுள்ளார். தன்னைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பது தெரியும் என்றும், இதற்கெல்லாம் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதே வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், எந்தவொரு தகவலையும் அதன் உண்மைத்தன்மையைச் சரிபார்த்த பிறகே நம்ப வேண்டும் என்றும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.