‘மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை’ - கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி
கர்நாடக அரசு, பெங்களூரு தெற்கு மாவட்டத்தின் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே சமர்ப்பித்திருந்தது. அந்த அறிக்கையை ஆய்வு செய்த மத்திய நீர் ஆணையம், சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அவற்றை திருத்தி மீண்டும் சமர்ப்பிக்குமாறு கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.இந்த சூழலில், பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, மேகதாது அணை திட்டத்தை மாநில அரசு உறுதியாக செயல்படுத்தும் என்று தெரிவித்தார். இந்தத் திட்டத்தை தடுக்க தமிழக அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், அண்டை மாநிலங்கள் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க முடியாது என்று மத்திய அரசே கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும், விரிவான திட்ட அறிக்கையில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு, வரும் 15-ஆம் தேதிக்குள் அதை மத்திய அரசிடம் மீண்டும் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினாலும் அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று கூறிய ராமலிங்க ரெட்டி, இந்தத் திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இரண்டு முறை தொடர்ந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவித்தார்.இதனால், மேகதாது அணைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணியில் கர்நாடக அரசு தொடர்ந்து முன்னேறும் என்றும், வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.