முதல்வர் விஜய் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்; 2,920-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு எதிர்பார்ப்பு
சென்னை நந்தனத்தில் செயல்படும் வழிகாட்டி நிறுவனத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் வழிகாட்டி நிறுவனமும் பல்வேறு முன்னணி சர்வதேச நிறுவனங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தித் துறை, உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இந்த முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் 2,920-க்கும் அதிகமானோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சப் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை நிறுவவுள்ளது. இதன் மூலம் 220 பேருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஜெர்மனியைச் சேர்ந்த நார்டெக்ஸ் நிறுவனம் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை மாநிலத்தில் தொடங்க உள்ளது. இந்த மையத்தின் வாயிலாக 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். இவ்விரு நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் மொத்தம் 1,220 உயர்தர ஊதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என கூறப்பட்டுள்ளது.இந்த முதலீடுகள், உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான முக்கிய சர்வதேச மையமாக சென்னை நகரின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், புத்தாக்கத்தை மையமாகக் கொண்ட தொழில் வளர்ச்சி, அறிவுசார் முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் திறமையான மனிதவளத்திற்கு தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அரசின் தொலைநோக்கு நோக்கத்துடன் இம்முதலீடுகள் ஒத்துப்போகின்றன என்றும் குறிப்பிடப்பட்டது.உயர்கல்வித் துறையில், ஆஸ்திரேலியாவின் முன்னணி ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் (University of Western Australia - UWA), இந்தியாவில் தனது முதல் வளாகத்தை சென்னை நகரில் அமைக்க உள்ளது.