திமுக தொடங்கப்பட்ட செப்டம்பர் 17-ம் தேதி, அக்கட்சியின் நிறுவனர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி மற்றும் தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி ஆகியவற்றை இணைத்து, ஆண்டுதோறும் திமுக சார்பில் முப்பெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில் கட்சியின் சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது மற்றும் மு.க.ஸ்டாலின் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா செப்டம்பர் 15-ம் தேதியான இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், இன்று நடைபெற இருந்த முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். முப்பெரும் விழா நடைபெறும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக சென்னையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.