சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு. இவர் தனது குடும்பத்தினருடன் கொளத்தூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 9-ம் தேதி அதிகாலை வி.எஸ்.பாபுவுக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்ட பின்னர், அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து அவசர சிகிச்சையைத் தொடங்கினர். சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வி.எஸ்.பாபு, தற்போது பல்துறை நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
Advertisement
அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளுடன் சுவாச ஆதரவும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தீவிர மருத்துவ மேற்பார்வையில் வி.எஸ்.பாபுவின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மருத்துவப் பரிசோதனை முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாகவும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.