தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகே துக்க வீட்டில் உடலை வைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட குளிர்சாதன பெட்டிக்கு மின் இணைப்பு வழங்கும் பணியின்போது மின்சாரம் தாக்கி 25 வயது வாலிபர் உயிரிழந்தார். செம்பூர் நடுத்தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முத்துசசி (25). அதே பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (70) உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க முத்துசசி சென்றிருந்தார். அப்போது, மாரியம்மாளின் உடலை வைப்பதற்காக கொண்டுவரப்பட்ட குளிர்சாதன பெட்டிக்கு மின் இணைப்பு வழங்கும் பணியில் முத்துசசி ஈடுபட்டிருந்தார்.
Advertisement
எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். உடனிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முத்துசசியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த முத்துசசியின் உடல் உடற்கூறாய்வுக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.