மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவு: தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை!
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு வருகிற 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுவதால், இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரசாரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி முதல்-அமைச்சர் விஜய், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று ஒரே நாளில் இரு தொகுதிகளிலும் ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தனர். மதுராந்தகத்தில் விஜய் ரோடு ஷோ மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் விஜய் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு காரில் புறப்பட்டார். வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மாமண்டூர் சந்திப்பில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு விஜய் தனது ரோடு ஷோவை தொடங்கினார். திறந்தவெளி வேனில் நின்றபடி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். புக்கத்துரை, பழையனூர், படாளம் உள்ளிட்ட சந்திப்புகளில் ஏராளமானோர் திரண்டு அவருக்கு வரவேற்பு அளித்தனர். பரிசுப் பொருட்களுடன் காத்திருந்த பொதுமக்களுக்காக பல இடங்களில் வாகனத்தை நிறுத்திய விஜய், அவர்கள் வழங்கிய செங்கோல், சாமி சிலைகள், வேல், பூங்கொத்துகள் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்டார். எம்.ஜி.ஆர். ஆசீர்வதிப்பது போன்ற படங்களையும் சிலர் அவரிடம் வழங்கினர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திறந்தவெளி வாகனத்தில் பயணம் செய்த விஜயை காண வழிநெடுகிலும் மக்கள் திரண்டனர். அவர்களை பார்த்து விஜய் விசில் அடித்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஜானகிபுரம், கருங்குழி, அய்யனார் கோவில் சந்திப்பு, மாம்பாக்கம், முதுகரை, மேல்மருவத்தூர் கோவில் சந்திப்பு, சரவம்பாக்கம், கீழ் அத்திவாக்கம், எலப்பாக்கம், மேளச்சேரி, தண்டலம் உள்ளிட்ட 40 இடங்களில் அவர் வாக்கு சேகரித்தார். எல்.எண்டத்தூரில் வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கிய விஜய், அங்குள்ள டீக்கடையில் தேநீர் அருந்தினார். ஊர் பெரியவர்களுடன் அமர்ந்து சிறிது நேரம் பேசினார். அப்போது டீக்கடைக்காரரிடம், தேநீர் நன்றாக இருப்பதாக தெரிவித்தார். கிளியாநகர் பகுதியில் வாகனத்தை நிறுத்திய அவர், வயல்வெளிக்குச் சென்று பார்வையிட்டார். அங்கு இருந்த பெண்களிடமும் வாக்கு கேட்டார். செம்பூண்டியில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். ராமபுரத்தில் வயலில் உழவு பணி நடைபெறுவதை பார்த்த விஜய், அங்கு சென்று டிராக்டர் ஓட்டிக்கொண்டிருந்த இளைஞரை சந்தித்தார். அவரின் தோளில் தட்டி பாராட்டிய பின்னர், டிராக்டரில் ஏறி சிறிது நேரம் தானும் ஓட்டினார்.