புதுக்கோட்டையில் 6 மாத கர்ப்பிணி கொலை: நாத்தனார்கள், மாமியார் உள்ளிட்ட 6 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மாத கர்ப்பிணியான இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பிரெட் சாப்பிடும்போது மூச்சுத்திணறி உயிரிழந்ததாகக் கூறி நாடகமாடியதாக, அவரது நாத்தனார்கள், மாமியார் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேட்டுப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் பாண்டித்துரை (35). நெடுஞ்சாலை பணிகளுக்கான ஒப்பந்ததாரராக பணியாற்றி வரும் இவரது மனைவி சந்தியா (21), 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். பாண்டித்துரையின் சகோதரிகளான பாண்டி மீனா (33), பொற்கொடி (29) ஆகியோர் தங்களது கணவர்களைப் பிரிந்து, பாண்டித்துரையின் வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், பாண்டித்துரை வேலை காரணமாக ஈரோடு சென்றிருந்தார். கடந்த 30-ந்தேதி அதிகாலை 6.30 மணியளவில் சந்தியா காலை உணவாக பிரெட் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது விக்கல் ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உறவினர்களுடன் சேர்ந்து அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சந்தியா உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கணேஷ் நகர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அன்று மாலை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில், சந்தியா இயற்கையாக உயிரிழக்கவில்லை என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சந்தேக மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. தொடர்ந்து பாண்டித்துரையின் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.