மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவு: தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
03 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 03 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவு: தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவு: தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு வருகிற 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுவதால், இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரசாரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி முதல்-அமைச்சர் விஜய், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று ஒரே நாளில் இரு தொகுதிகளிலும் ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தனர். மதுராந்தகத்தில் விஜய் ரோடு ஷோ மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் விஜய் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு காரில் புறப்பட்டார். வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மாமண்டூர் சந்திப்பில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு விஜய் தனது ரோடு ஷோவை தொடங்கினார். திறந்தவெளி வேனில் நின்றபடி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். புக்கத்துரை, பழையனூர், படாளம் உள்ளிட்ட சந்திப்புகளில் ஏராளமானோர் திரண்டு அவருக்கு வரவேற்பு அளித்தனர். பரிசுப் பொருட்களுடன் காத்திருந்த பொதுமக்களுக்காக பல இடங்களில் வாகனத்தை நிறுத்திய விஜய், அவர்கள் வழங்கிய செங்கோல், சாமி சிலைகள், வேல், பூங்கொத்துகள் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்டார். எம்.ஜி.ஆர். ஆசீர்வதிப்பது போன்ற படங்களையும் சிலர் அவரிடம் வழங்கினர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திறந்தவெளி வாகனத்தில் பயணம் செய்த விஜயை காண வழிநெடுகிலும் மக்கள் திரண்டனர். அவர்களை பார்த்து விஜய் விசில் அடித்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஜானகிபுரம், கருங்குழி, அய்யனார் கோவில் சந்திப்பு, மாம்பாக்கம், முதுகரை, மேல்மருவத்தூர் கோவில் சந்திப்பு, சரவம்பாக்கம், கீழ் அத்திவாக்கம், எலப்பாக்கம், மேளச்சேரி, தண்டலம் உள்ளிட்ட 40 இடங்களில் அவர் வாக்கு சேகரித்தார். எல்.எண்டத்தூரில் வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கிய விஜய், அங்குள்ள டீக்கடையில் தேநீர் அருந்தினார். ஊர் பெரியவர்களுடன் அமர்ந்து சிறிது நேரம் பேசினார். அப்போது டீக்கடைக்காரரிடம், தேநீர் நன்றாக இருப்பதாக தெரிவித்தார். கிளியாநகர் பகுதியில் வாகனத்தை நிறுத்திய அவர், வயல்வெளிக்குச் சென்று பார்வையிட்டார். அங்கு இருந்த பெண்களிடமும் வாக்கு கேட்டார். செம்பூண்டியில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். ராமபுரத்தில் வயலில் உழவு பணி நடைபெறுவதை பார்த்த விஜய், அங்கு சென்று டிராக்டர் ஓட்டிக்கொண்டிருந்த இளைஞரை சந்தித்தார். அவரின் தோளில் தட்டி பாராட்டிய பின்னர், டிராக்டரில் ஏறி சிறிது நேரம் தானும் ஓட்டினார். ஆணைக்குன்னம் பகுதியில் வீடு வீடாக சென்று விஜய் வாக்கு சேகரித்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர். அதை புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட அவர், பதிலுக்கு அவர்களுக்கும் ஆரத்தி எடுத்தார். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய அவரது ரோடு ஷோ மாலை 6.30 மணி வரை சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. தேரடி தெருவில் விஜய் தனது தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்தார். தாராபுரத்தில் ஸ்டாலின் பிரசாரம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ரோடு ஷோ நடத்தினார். அமராவதி சிலை பகுதியில் இருந்து தொடங்கிய இந்த பிரசாரம், தாராபுரம் பெரிய கடைவீதி, பூக்கடை வீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. வழிநெடுகிலும் தி.மு.க. தொண்டர்கள் மலர் தூவி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர். ரோடு ஷோவின்போது வாகனத்தில் இருந்து இறங்கிய ஸ்டாலின், அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். தொண்டர்கள் வழங்கிய பரிசுகளையும் பெற்றுக்கொண்டார். அப்போது தொண்டர்கள் வைத்திருந்த பலூன்களை ஸ்டாலினை நோக்கி வீசியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிரசாரத்தின் இடையே வாகனத்தை நிறுத்தி அருகில் இருந்த மளிகைக்கடைக்குச் சென்ற ஸ்டாலின், கடைக்காரரிடம் அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர், 4 மாதங்களுக்கு முன்பு இருந்த விலையுடன் ஒப்பிடும்போது அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், அன்றாட சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் பொதுமக்கள் சிரமப்படுவதாகவும் கூறினார். மேலும், “ரீல்ஸ்” பார்ப்பதால் மக்களின் வயிறு நிறைந்துவிடுமா? என்றும் கேள்வி எழுப்பினார். இந்தியா முழுவதும் ஜி.எஸ்.டி. வருவாய் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 3 மாதங்களாக தமிழ்நாடு சரிவை சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பு தாராபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதிக்கு ஆதரவாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இரவு 8 மணியளவில் தாராபுரத்தில் உள்ள அ.தி.மு.க. தேர்தல் பணிமனை அலுவலகத்தில் இருந்து வாகனத்தில் ரோடு ஷோ தொடங்கினார். உடுமலை சாலை, அலங்கியம் சாலை வழியாக தாராபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் நடைபெற்றது. வழியெங்கும் காத்திருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மலர் தூவி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சிலர் அவருடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர். தாராபுரம் அண்ணா சிலை அருகே ரோடு ஷோ நிறைவடைந்ததை தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.