கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மது போதையில் ஆம்புலன்ஸ் இயக்கிய ஓட்டுநர் விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை பொதுமக்கள் துரத்திப் பிடித்து தாக்கியதால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. நாகர்கோவில் நகரின் பரபரப்பான வெட்டுரிணிமடம் சந்திப்பில் இன்று மதியம், ஒரு ஆம்புலன்ஸ் அதிக வேகத்திலும் கட்டுப்பாடின்றியும் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த ஆம்புலன்ஸ் மற்றொரு வாகனத்தின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. விபத்துக்குப் பிறகு ஆம்புலன்ஸை அங்கேயே நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பிச் செல்ல முயன்றார். இதைக் கண்ட பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவரை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
Advertisement
அவரிடம் விசாரித்தபோது, அவர் கடுமையான மது போதையில் இருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. உயிர் காக்கும் அவசர சேவை வாகனத்தை மது அருந்திய நிலையில் இயக்கியதாக குற்றம்சாட்டி ஆத்திரமடைந்த பொதுமக்கள், அவரை சாலையிலேயே தாக்கினர்.இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், ஆம்புலன்ஸ் ஓட்டுநரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.