நாகை மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில், மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்து மதத்தைச் சேர்ந்த மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது. நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அனைத்து மதத்தினரும் வழிபடும் இடமாக திகழும் இந்த தர்காவில், இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் வழிபாடு செய்வது வழக்கம். இந்த நிலையில், இந்து மதத்தைச் சேர்ந்த மணமக்களுக்கு நேற்று நாகூர் தர்காவில் திருமணம் நடைபெற்றது. இதற்காக மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டோர் அவர்களை அதிகாலையிலேயே தர்காவுக்கு அழைத்து வந்தனர்.
Advertisement
தொடர்ந்து, ஆண்டவர் சன்னதி முன்பு மணமக்கள் அமர வைக்கப்பட்டனர். பின்னர் மணமகன், மணமகளின் கழுத்தில் தாலி கட்டி திருமணத்தை நடத்தினார். இந்த நிகழ்வின்போது நாகூர் தர்கா நிர்வாகம் மற்றும் ஆலோசனைக் குழுத் தலைவர் முகமது கலிபா சாஹிப், மணமக்களின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திருமணத்தில் பங்கேற்றவர்கள் மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நாகூர் தர்காவுக்கு இந்து மதத்தினர் தினமும் வந்து வழிபட்டு செல்வது வழக்கமாக இருந்தாலும், தர்காவில் இந்து ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது அங்கு வந்திருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் இந்த நிகழ்வுக்காக மணமக்களின் பெற்றோருக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.