புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மாத கர்ப்பிணியான இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பிரெட் சாப்பிடும்போது மூச்சுத்திணறி உயிரிழந்ததாகக் கூறி நாடகமாடியதாக, அவரது நாத்தனார்கள், மாமியார் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேட்டுப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் பாண்டித்துரை (35). நெடுஞ்சாலை பணிகளுக்கான ஒப்பந்ததாரராக பணியாற்றி வரும் இவரது மனைவி சந்தியா (21), 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். பாண்டித்துரையின் சகோதரிகளான பாண்டி மீனா (33), பொற்கொடி (29) ஆகியோர் தங்களது கணவர்களைப் பிரிந்து, பாண்டித்துரையின் வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், பாண்டித்துரை வேலை காரணமாக ஈரோடு சென்றிருந்தார். கடந்த 30-ந்தேதி அதிகாலை 6.30 மணியளவில் சந்தியா காலை உணவாக பிரெட் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது விக்கல் ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உறவினர்களுடன் சேர்ந்து அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சந்தியா உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கணேஷ் நகர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அன்று மாலை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில், சந்தியா இயற்கையாக உயிரிழக்கவில்லை என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சந்தேக மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. தொடர்ந்து பாண்டித்துரையின் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், பாண்டி மீனா, பொற்கொடி, மாமியார் பானுமதி (50) மற்றும் உறவினர்களான கனிமொழி (27), செல்வி (38), கார்த்தி (24) ஆகிய 6 பேரும் சந்தியாவை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், பாண்டி மீனா மற்றும் பொற்கொடி ஆகிய இருவரும் சில வாலிபர்களுடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட தொடர்பு வைத்திருந்ததாகவும், இதுபற்றி சந்தியா தனது கணவரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பாண்டித்துரை தனது சகோதரிகளை கண்டித்துள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில் சந்தியாவை கொலை செய்ய அவரது கணவர் வீட்டார் திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர். பாண்டித்துரை வெளியூரில் இருந்ததை பயன்படுத்திக் கொண்டு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சந்தியாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும், தலையணையால் முகத்தை அழுத்தியும் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர். பின்னர் கொலையை மறைத்து இயற்கை மரணம் போன்று காட்டும் நோக்கில், சந்தியாவின் வாய் மற்றும் மூக்கில் பிரெட்டை திணித்ததுடன், பால் ஊற்றியதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், பிரெட் சாப்பிடும்போது விக்கல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்ததாகக் கூறி நாடகமாடியதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர். கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்ற நடவடிக்கைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர். கார்த்தி புதுக்கோட்டை மாவட்ட சிறையிலும், பாண்டி மீனா, பொற்கொடி, கனிமொழி, செல்வி மற்றும் பானுமதி ஆகியோர் திருச்சி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டனர்.