நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதையும், நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சா் பதவி விலக வேண்டும் என்பதையும் வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலம் கீழ்பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஷைலேஷ் அருள்ராஜ் தலைமையில் மாணவர்கள் நேற்று காலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கப்படாததால், அங்கு வந்த போலீசார் மாணவர்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.
Advertisement
ஆனால் மாணவர்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுக்க முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.தடையை மீறி போராட்டத்தை தொடர்ந்த மாணவர்களை போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சிலரை போலீசார் தூக்கிச் சென்றதுடன், சிலரை சாலையிலிருந்து இழுத்துச் சென்று வாகனங்களில் ஏற்றிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக மொத்தம் 12 பேரை போலீசார் கைது செய்து, அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிதுநேரம் பதற்றமான சூழல் நிலவியது.