Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 02 நவம்பர் 2026 | 16 ஐப்பசி பராபவ வருடம்

நானே எனக்கு முதல் விமர்சகர் – ஏ.ஆர்.ரகுமான்

நானே எனக்கு முதல் விமர்சகர் – ஏ.ஆர்.ரகுமான்

‘ராமாயணா’ திரைப்படத்தின் இசை தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விளக்கம் அளித்துள்ளார். தனது இசையை மதிப்பிடுவதற்கு முன்பு ரசிகர்களும் விமர்சகர்களும் அதனை முழுமையாகக் கேட்டு, புரிந்துகொள்ள போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். நிதேஷ் திவாரி இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் ‘ராமாயணா’. இதில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யாஷும் நடிக்கின்றனர். மேலும், சூர்ப்பனகையாக ரகுல் பிரீத் சிங்கும், லட்சுமணனாக ரவி துபேவும், அனுமனாக சன்னி தியோலும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2026 நவம்பர் 5-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஹாலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். ஏற்கனவே வெளியான ‘ஜெய் ஜெய் ராம்’, ‘ராவண தாண்டவம்’ ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து மூன்றாவது பாடலான ‘மங்கள வண்ணமே’ வெளியாகியுள்ளது. இந்தியில் ‘மங்கள் ரங்’ என்ற பெயரில் வெளியான இப்பாடல், ராமர் - சீதையின் திருமண நிகழ்வை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரேயா கோஷல், அர்ஜித் சிங் ஆகியோர் பாடியுள்ள இந்தப் பாடலுக்கு குமார் விஸ்வாஸ் வரிகள் எழுதியுள்ளார். இந்நிலையில், ‘மங்கள் ரங்’ பாடல் குறித்து இணையத்தில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பதிலளிக்கும் வகையில், சமீபத்திய தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் ஏ.ஆர்.ரகுமான் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அப்போது பேசிய அவர், தனது இசையைப் பற்றிய கருத்துகளைத் தெரிவிப்பதற்கு முன்பாக அதைக் கேட்பவர்கள் அதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Advertisement
மேலும், “எனது படைப்புகளை முதலில் மதிப்பிடுபவர் நான்தான். நான் உருவாக்கும் அனைத்துமே எனக்குப் பிடித்துவிடும் என்று சொல்ல முடியாது. ஒரு இசை உருவாக்கம் குறித்து நாங்கள் ஒரே நாளில் முடிவெடுப்பதில்லை. சில நேரங்களில் பல மாதங்கள் அதனுடன் பயணித்த பிறகே இறுதி முடிவுக்கு வருகிறோம். ஒவ்வொரு படைப்புக்கும் பின்னால் ஒரு குறிப்பிட்ட சிந்தனை இருக்கிறது. சில விஷயங்களைப் புரிந்துகொள்ள மானுடவியல் சார்ந்த பார்வையும் அவசியமாகிறது. சில இசைத் துணுக்குகள் ஊறுகாயைப் போல காலம் செல்லச் செல்ல அதன் தன்மையை வெளிப்படுத்தி, மேலும் சிறப்பாக மாறக்கூடும். ஆனால், பலரும் அதன் ஒரு பகுதியை மட்டுமே கவனிக்கிறார்கள். ஒரு திரைப்படத்தின் முழுமையான பின்னணியையும் பார்க்காமல் இசையை மட்டும் வைத்து முடிவுக்கு வந்துவிடக் கூடாது. பொறுமையுடன் அணுக வேண்டும். படம் வெளியான பிறகுதான் குறிப்பிட்ட இசையை ஏன் பயன்படுத்தினோம் என்பதற்கான காரணங்கள் விமர்சகர்களுக்குப் புரியவரும். பொதுமக்களின் கருத்துகளுக்கு ஒரு எல்லை வரைதான் முக்கியத்துவம் கொடுக்க முடியும். அதற்குப் பிறகு அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டு, நமது பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார். தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸின் கருத்தை மேற்கோள் காட்டிய ரகுமான், “அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்று நினைத்தால், ஐஸ்கிரீம் விற்பனை செய்யச் செல்லலாம்” என்று கூறினார். இதன் மூலம், ஒரு படைப்பாளி அனைவரது விருப்பத்திற்கும் ஏற்ப தனது படைப்பை மாற்றிக்கொண்டே இருக்க முடியாது என்பதையும், தனக்கான இலக்கில் கவனம் செலுத்தி புதிய முயற்சிகளை முன்னெடுப்பதே முக்கியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு