தமிழகத்தில் மூலதனச் செலவினங்கள் மந்தம்... பொருளாதார வளர்ச்சி பாதிக்கும் – அண்ணாமலை எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்காததும், அரசின் மூலதனச் செலவினங்கள் குறைந்துள்ளதாகக் கூறப்படுவதும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய் நிலவரம், பொருளாதாரச் சூழல், தவெக அரசின் நிதி நிர்வாக முன்னுரிமைகள் மற்றும் நிலையான வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுவதாகக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பல மாதங்களாகச் சரிவைச் சந்தித்து வந்த ஜிஎஸ்டி வருவாய், அக்டோபரில் மட்டும் ஓரளவு உயர்ந்திருப்பது சிறிய ஆறுதலாக இருந்தாலும், அந்த வளர்ச்சியும் ஒற்றை இலக்கத்திலேயே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பண்டிகைக் காலம், பள்ளிகளுக்கான நீண்ட விடுமுறை மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு என பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்க வேண்டிய சூழலிலும், வரி வருவாயில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாதது கவலைக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டின் ஜிஎஸ்டி வருவாயை ஒப்பிடும்போது, ஐஜிஎஸ்டி பகிர்வில் ஏற்பட்ட மாற்றத்தை இதற்கான காரணமாகக் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐஜிஎஸ்டி நடைமுறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றல்ல எனக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்தைப் போன்ற பொருளாதார நடவடிக்கைகளைக் கொண்ட கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்து சிறப்பான ஜிஎஸ்டி வளர்ச்சியைப் பதிவு செய்வதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் வருவாயை அதிகரிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்படும் மூலதனச் செலவினங்களைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆறு மாதங்களாகப் பல அரசுத் துறைகளில் மூலதனச் செலவுகள் மந்தமடைந்துள்ளதாகப் பொதுவான கருத்து நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசின் மூலதனச் செலவினங்கள் குறைவதால் வேலைவாய்ப்புகள், ஒப்பந்தப் பணிகள், தொழில்துறை செயல்பாடுகள் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படும். இதன் தாக்கம் மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியிலும் எதிரொலிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.