தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகரில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். திறக்கப்படவுள்ள கடையை முற்றுகையிட்டு அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் அரசு பொறுப்பேற்ற பின்னர் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. இருப்பினும், அதன்பிறகு பல்வேறு இடங்களில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு முன்பு தூத்துக்குடி மீளவிட்டான் ரோட்டில் டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதும், அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
Advertisement
இதையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் சப்-கலெக்டர் தலையிட்டதைத் தொடர்ந்து, அந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்த நிலையில், குறிஞ்சி நகர் பகுதியில் தனியார் பாருடன் கூடிய புதிய டாஸ்மாக் கடையை திறப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்கப்படுவதைக் கண்டு அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர். 14-வது வார்டு கவுன்சிலரும், மாநகர தி.மு.க. துணை செயலாளருமான கீதா முருகேசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் திரண்டு வந்து, திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.