Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

துணை சபாநாயகர் ரவிசங்கரை கண்டித்து 18-ந் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்! - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

துணை சபாநாயகர் ரவிசங்கரை கண்டித்து 18-ந் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்! - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழக சட்டமன்ற துணை சபாநாயகரும், துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கரைக் கண்டித்து, வரும் 18-ம் தேதி அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: துணை சபாநாயகர் ரவிசங்கரை சந்தித்து தனது குறைகளைத் தெரிவிக்கச் சென்ற சமூக ஆர்வலர் கார்த்திக் குமார் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவரை அவதூறான வார்த்தைகளால் திட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் தமிழக வெற்றிக் கழக அரசு மவுனம் காப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததாகவும், ஆட்சி அமைந்தது முதல் ஜனநாயக நெறிமுறைகள் மீறப்படுவதாகவும் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார். போதைப்பொருள் விற்பனை விவகாரங்களில் சிக்கிய கட்சி நிர்வாகிகள் முதல், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான பல்வேறு சர்ச்சைகள் வரை, ஆளும் கட்சியினர் அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கார்த்திக் குமார் மீதான தாக்குதல் தொடர்பான ஆதாரங்கள் வெளிவந்த பின்னர், அவரை மீண்டும் மிரட்டி, சம்பவம் நடைபெறவில்லை என அவரையே சமூக வலைதளத்தில் தெரிவிக்கச் செய்ததாகவும் ரவிசங்கர் மீது எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதற்காக சில காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர், பாதிக்கப்பட்ட கார்த்திக் குமார் சம்பவம் தொடர்பான முழுமையான வீடியோவை வெளியிட்டதாகவும், இதன் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இத்தனை குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலும், முதலமைச்சர் விஜய் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement
துணை சபாநாயகர் ரவிசங்கர் மற்றும் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்கள் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைப் பாதிக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். 18-ம் தேதி துறையூரில் ஆர்ப்பாட்டம் இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் வரும் 18.11.2026 (புதன்கிழமை) காலை 10 மணிக்கு துறையூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்திற்கு அதிமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி தலைமை தாங்குகிறார். திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் என். யோகநாதன் முன்னிலை வகிக்கிறார். இதில் அதிமுக அமைப்புச் செயலாளர்கள் டி. ரத்தினவேல் (முன்னாள் எம்.பி.), ஆர். மனோகரன், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் சி. கார்த்திகேயன், திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் டி.என். சிவக்குமார், மகளிர் அணியின் இணைச் செயலாளரும் லால்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் லீமா ரோஸ் மார்டின் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மேலும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் தற்போதைய மற்றும் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அனைவரும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும், தமிழக வெற்றிக் கழக அரசின் நிர்வாகச் செயல்பாடுகளைக் கண்டித்தும் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு