முதியவரை உயிருடன் எரித்துக் கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்: முன்விரோதம் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே முதியவர் ஒருவர் பக்கத்து வீட்டுக்காரரால் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கான பின்னணி குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி கைப்பற்றிவிளை பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (86). இவரது மகன் ஜெபமணி (62). இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது வீட்டின் அருகே ஆல்பர்ட் அஸ்வின் (38) என்பவர் வசித்து வந்தார். மாற்றுத்திறனாளியான இவர், மது அருந்திவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போதெல்லாம் குழந்தைவேல் மற்றும் அவரது மகன் ஜெபமணியிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை ஜெபமணி தட்டிக்கேட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஆல்பர்ட் அஸ்வின் தொடர்ந்து அவர்களுக்குத் தொந்தரவு கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய ஜெபமணி அதிர்ச்சியளிக்கும் காட்சியைக் கண்டார். ஆல்பர்ட் அஸ்வின், அவர்களுக்குச் சொந்தமான வீட்டின் சுவரை சேதப்படுத்தியதுடன், ஜன்னல் கதவுகளையும் உடைத்துக் கொண்டிருந்தார். இதுகுறித்து ஜெபமணி கேள்வி எழுப்பியபோது, ஆல்பர்ட் அஸ்வின் அவரை ஆபாசமாகப் பேசி திட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த ஜெபமணி, இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப் போவதாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். பின்னர் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்குச் சென்று பக்கத்து வீட்டுக்காரரின் நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினார். ஆனால், வீட்டில் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவரது தந்தை குழந்தைவேல் உடல் முழுவதும் எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். தந்தையின் சடலத்தைக் கண்டு ஜெபமணி கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தைவேலின் உடலைக் கைப்பற்றினர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தைவேலை அவரது பக்கத்து வீட்டுக்காரரான ஆல்பர்ட் அஸ்வின் உயிருடன் எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது. ஜெபமணியும் அவரது தந்தை குழந்தைவேலும் தனக்கு எதிராகச் செயல்படுவதாக ஆல்பர்ட் அஸ்வின் ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் ஏற்பட்ட தகராறின்போது ஜெபமணி போலீசில் புகார் அளிக்கச் சென்றதால் அவரது கோபம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் ஜெபமணிக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணத்தில், அவரது தந்தை குழந்தைவேலைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி வீட்டுக்குள் நுழைந்த ஆல்பர்ட் அஸ்வின், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பாமாயிலை குழந்தைவேல் மீது ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் எதுவும் நடக்காதது போல் வீட்டில் இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆல்பர்ட் அஸ்வினை கைது செய்தனர். பக்கத்து வீட்டுக்காரருடனான முன்விரோதத்தில் 86 வயது முதியவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.