தீரன் சின்னமலை நினைவு நாளில் எடப்பாடி பழனிசாமி மரியாதை; அதிமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளையொட்டி, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக கட்சித் தலைமையகம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் சிலை மற்றும் அவரது திருஉருவப் படத்திற்கு, காலை 10 மணியளவில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளார். பின்னர் தலைமைக் கழக நிர்வாகிகளும் மரியாதை செலுத்தவுள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதேநாளில், ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகேயுள்ள ஓடாநிலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலை மற்றும் திருஉருவப் படத்திற்கு அதிமுக சார்பில் எஸ்.பி.
வேலுமணி, கே.சி. கருப்பணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.இந்த நிகழ்வில் ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், சேலம் மாவட்டம் சங்ககிரி–ஈரோடு பிரிவு சாலையில் உள்ள தியாகி தீரன் சின்னமலை நினைவுச் சின்னத்தில் அவரது திருஉருவப் படத்திற்கு அதிமுக சார்பில் பி. தங்கமணி, வெ. சரோஜா, ஆர். இளங்கோவன், எஸ். வெற்றிவேல், கே.பி.பி. பாஸ்கர் உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் திரளாக பங்கேற்குமாறு கட்சித் தலைமையகம் அழைப்பு விடுத்துள்ளது.