திருப்பூர் காவலர் குடியிருப்பில் பெண் போலீஸ் உயிரிழப்பு; பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை
திருப்பூர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்த பெண் காவலர் ஒருவர் காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பணிச்சுமையால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தைச் சேர்ந்த ராஜாவின் மகள் ரஞ்சனி (24), 2022-ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். அதன் பின்னர் திருப்பூர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்த அவர், நல்லூர் காவலர் குடியிருப்பில் தங்கி சேவையாற்றி வந்தார். நேற்று காலை வழக்கம்போல் பணிக்குச் சென்ற ரஞ்சனி, காலை 10.30 மணியளவில் மீண்டும் குடியிருப்புக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.குடியிருப்புக்கு வந்த அவர், யாரோ ஒருவருடன் செல்போனில் ஆவேசமாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் தனது அறைக்குள் சென்று கதவை உள்ளிருந்து பூட்டிக்கொண்ட அவர், முன்பு இணைந்து பணியாற்றிய பெண் காவலருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து அந்த பெண் காவலர் உடனடியாக குடியிருப்பில் இருந்தவர்களுக்கு தகவல் அளித்தார்.
அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ரஞ்சனி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பாக நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரஞ்சனியின் அறை சீர்குலைந்த நிலையில் இருந்ததுடன், அங்கிருந்த சில பொம்மைகள் மற்றும் பொருட்களும் உடைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.மேலும், ரஞ்சனியின் செல்போன் கடவுச்சொல் பாதுகாப்பில் இருப்பதால், அதிலுள்ள தகவல்களை ஆய்வு செய்ய நிபுணர்களின் உதவி பெறப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவருடன் ஒரே ஆண்டில் காவல்துறையில் சேர்ந்த ஒருவருடன் நெருங்கிய பழக்கம் இருந்ததாக கூறப்படும் நிலையில், காதல் தொடர்பான பிரச்சினையா அல்லது பணிச்சுமையா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.