மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் நடைபெற உள்ள மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, செப்டம்பர் 17-ம் தேதி மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பாபிஷேகம், வரும் 17-ம் தேதி (வியாழக்கிழமை) பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்று கும்பாபிஷேகத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் முழுவதும் செப்டம்பர் 17-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Advertisement
அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, 17.09.2026 அன்று மதுரை மாவட்ட எல்லைக்குள் செயல்படும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தும். இந்த விடுமுறைக்கு ஈடாக, செப்டம்பர் 26-ம் தேதி (சனிக்கிழமை) மதுரை மாவட்டத்தில் முழு பணி நாளாக செயல்படும். மேலும், இந்த விடுமுறை செலாவணி முறிச் சட்டம், 1881-ன் கீழ் அறிவிக்கப்படாததால், அவசரப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் மதுரை மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி அதிகளவில் பக்தர்கள் மதுரைக்கு வருகை தர உள்ள நிலையில், பொதுமக்களின் வசதி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.