இந்தியா தலைமையில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்
18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த இரண்டு நாள் மாநாட்டில், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகளை உள்ளடக்கிய பிரிக் கூட்டமைப்பு கடந்த 2006ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் 2010ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இணைந்ததை தொடர்ந்து, இந்த அமைப்பு ‘பிரிக்ஸ்’ என அழைக்கப்பட்டது. பொருளாதாரம், வர்த்தகம், சர்வதேச அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இதன் தொடர்ச்சியாக எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் இணைந்தன. இதனால் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. மேலும், பெலாரஸ், பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இணைப்பு நாடுகளாக உள்ளன. பிரிக்ஸ் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு உறுப்பு நாடு மாநாட்டிற்கு தலைமை வகிக்கிறது. இந்தக் கூட்டங்களில் சர்வதேச அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்படுகின்றன. தற்போது பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. இதையடுத்து, 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்தியா தலைமையில் டெல்லியில் இன்று தொடங்கியுள்ளது. இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. 'வலிமை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான மாநாடு நடைபெறுகிறது.