தாமிரபரணி நதியை மாசுபட அனுமதிக்க முடியாது: ஐகோர்ட்டு மதுரை கிளை...
மதுரை:தாமிரபரணி ஆற்றின் மாசுபாடு தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, எந்தக் காரணத்திற்காகவும் நீர்நிலைகளை மாசுபடுத்த அனுமதிக்க முடியாது என்று வலியுறுத்தியுள்ளது.
விசாரணையின்போது, மத நம்பிக்கைகள் மதிக்கப்பட வேண்டியவை என்றாலும், அவற்றின் பெயரில் ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை கொட்டுவது ஏற்க முடியாதது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
நீரில் கரையாத துணிகள், பாலியஸ்டர் உள்ளிட்ட பொருட்கள் நீர்வாழ் உயிரினங்களுக்கும், ஆற்றின் இயற்கைச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இதுபோன்ற செயல்களைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
மேலும், தாமிரபரணி ஆற்றில் இனி மாசுபாடு ஏற்படாமல் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வுக்கான விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.