தமிழகத்தில் மூலதனச் செலவினங்கள் மந்தம்... பொருளாதார வளர்ச்சி பாதிக்கும் – அண்ணாமலை எச்சரிக்கை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
02 Nov 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 02 Nov 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தமிழகத்தில் மூலதனச் செலவினங்கள் மந்தம்... பொருளாதார வளர்ச்சி பாதிக்கும் – அண்ணாமலை எச்சரிக்கை

தமிழகத்தில் மூலதனச் செலவினங்கள் மந்தம்... பொருளாதார வளர்ச்சி பாதிக்கும் – அண்ணாமலை எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்காததும், அரசின் மூலதனச் செலவினங்கள் குறைந்துள்ளதாகக் கூறப்படுவதும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய் நிலவரம், பொருளாதாரச் சூழல், தவெக அரசின் நிதி நிர்வாக முன்னுரிமைகள் மற்றும் நிலையான வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுவதாகக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பல மாதங்களாகச் சரிவைச் சந்தித்து வந்த ஜிஎஸ்டி வருவாய், அக்டோபரில் மட்டும் ஓரளவு உயர்ந்திருப்பது சிறிய ஆறுதலாக இருந்தாலும், அந்த வளர்ச்சியும் ஒற்றை இலக்கத்திலேயே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பண்டிகைக் காலம், பள்ளிகளுக்கான நீண்ட விடுமுறை மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு என பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்க வேண்டிய சூழலிலும், வரி வருவாயில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாதது கவலைக்குரியது எனத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டின் ஜிஎஸ்டி வருவாயை ஒப்பிடும்போது, ஐஜிஎஸ்டி பகிர்வில் ஏற்பட்ட மாற்றத்தை இதற்கான காரணமாகக் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐஜிஎஸ்டி நடைமுறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றல்ல எனக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்தைப் போன்ற பொருளாதார நடவடிக்கைகளைக் கொண்ட கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்து சிறப்பான ஜிஎஸ்டி வளர்ச்சியைப் பதிவு செய்வதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் வருவாயை அதிகரிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்படும் மூலதனச் செலவினங்களைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆறு மாதங்களாகப் பல அரசுத் துறைகளில் மூலதனச் செலவுகள் மந்தமடைந்துள்ளதாகப் பொதுவான கருத்து நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசின் மூலதனச் செலவினங்கள் குறைவதால் வேலைவாய்ப்புகள், ஒப்பந்தப் பணிகள், தொழில்துறை செயல்பாடுகள் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படும். இதன் தாக்கம் மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியிலும் எதிரொலிக்கும் என அவர் எச்சரித்துள்ளார். மேலும், இந்தியாவின் மொத்த தொழிற்சாலைகளில் 15.43 சதவீதத்தைக் கொண்டுள்ள தமிழகம், தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், தொழில்துறையின் மொத்த மதிப்புக் கூட்டலில் (GVA) தமிழகத்தின் பங்களிப்பு 10.26 சதவீதமாக மட்டுமே இருப்பதால், தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் உற்பத்தித் துறை GVA-வில் தமிழகத்தின் பங்களிப்பு 10.3 சதவீதமாக இருந்தது. இத்தனை ஆண்டுகள் கடந்தும் அந்த அளவில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்பது கவனிக்க வேண்டிய அம்சம் என்றும், முன்பு தமிழகத்தைவிடப் பின்தங்கியிருந்த சில மாநிலங்கள் தற்போது வேகமாக வளர்ந்து இடைவெளியைக் குறைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாவட்டங்களுக்கு இடையிலான பிராந்திய வளர்ச்சி ஏற்றத்தாழ்வுகள் குறித்த அறிக்கைகளை மாநிலத் திட்டக்குழு வெளியிடுவது மட்டுமே பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களைக் கண்டறிந்து, அவற்றுக்கெனத் தனித்துவமான பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் சிறப்புத் திட்டங்களை உருவாக்குவதுடன், அவற்றின் செயல்பாடுகளை அரசு நேரடியாகக் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, முதலீடு மற்றும் பொருளாதாரச் செயல்பாடுகள் சீராகப் பரவுவதற்கான திட்டமிடல் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு உதாரணமாக, வகுப்பில் முதலிடம் பெறும் மாணவரைப் பாராட்டுவது அவசியம் என்றாலும், கடைசி இடத்தில் இருக்கும் மாணவருக்குத்தான் கூடுதல் கவனமும் சிறப்புப் பயிற்சியும் தேவைப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், ஏற்கெனவே வளர்ச்சியடைந்த மாவட்டங்களின் முன்னேற்றத்தைத் தொடர்வதோடு, பின்தங்கிய மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த நிலவரத்தைத் தவெக அரசு விரைவாகப் புரிந்துகொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது மாநிலத்தின் நலனுக்கு நல்லது என்றும் அண்ணாமலை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.