டெல்லியில் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள், ரூ.4.31 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் வீட்டு வேலைக்காரர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி வடக்கு மாவட்டம் மால் ரோடு பகுதியில் பிரபல தொழிலதிபர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது குடும்பத்தினர் கடந்த 2-ந்தேதி வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதனால் வீடு ஆள் நடமாட்டமின்றி இருந்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய புதிய வீட்டு வேலைக்காரரான கமல் என்ற அனில் காமத் மற்றும் அவரது கூட்டாளிகள், கடந்த 5-ந்தேதி இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.3 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். மறுநாள், அதாவது கடந்த 6-ந்தேதி காலை, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை மேலாளர் கவனித்தார். இதுகுறித்து அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து வடக்கு டெல்லி டிசிபி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்த போலீசார், கொள்ளையர்கள் டெல்லியில் இருந்து தப்பி ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சென்றிருப்பதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து ஜார்கண்ட் சென்ற போலீசார், அங்கு பதுங்கியிருந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
Advertisement
அவன் அளித்த தகவலின் அடிப்படையில் பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள சுகா நகர் கிராமத்திற்கு போலீசார் சென்றனர். அங்கு கமலின் மாமனாரான தேவ சந்திர சா (49) என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. முதற்கட்ட சோதனையில் நகைகள் எதுவும் சிக்கவில்லை. ஆனால், வீட்டின் ஒரு அறையின் தரைப்பகுதி புதிதாக பூசப்பட்டிருந்ததை போலீசார் கவனித்தனர். சந்தேகமடைந்த அவர்கள் அந்த இடத்தை சுமார் 5 அடி ஆழத்திற்கு தோண்டினர். அப்போது தரைக்குள் ஒரு பை மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்தப் பையை திறந்து பார்த்தபோது, அதில் 117 தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நெக்லஸ்கள், வளையல்கள், மோதிரங்கள் உள்ளிட்ட நகைகளுடன் ரூ.4.31 லட்சம் ரொக்கப் பணமும் பையில் இருந்தது. இதற்கிடையே போலீசாரிடம் சிக்காமல் தப்பிய முக்கிய குற்றவாளியான கமல், கடந்த 16-ந்தேதி டெல்லி ஆனந்த் விகார் பகுதியில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளையடித்த நகைகளை சில மாதங்கள் கழித்து விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி நேபாளத்திற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. மேலும், அங்கு ஆடம்பர உணவகம் அல்லது கபே தொடங்க அவர் திட்டமிட்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கமலின் திட்டத்தை முறியடித்த போலீசார், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.